ஈஷா சார்பில் இயற்கை இடுப்பொருட்கள் தயாரிக்கும் களப் பயிற்சி – பல மாவட்ட விவசாயிகள் பங்கேற்பு

0
346
isha news

ஈஷா விவசாய இயக்கம் மற்றும் டாடா அறக்கட்டளை சார்பில் சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சிறுவாச்சூர் கிராமத்தில் உள்ள சண்முகம் இயற்கை வேளாண் பண்ணையில் இயற்கை இடுப்பொருட்கள் தயாரிக்கும் களப் பயிற்சி இன்று (நவம்பர் 23) நடைபெற்றது.

இதில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், நாமக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 70 விவசாயிகள் பங்கேற்றனர். ஈஷா விவசாய இயக்கத்தின் பயிற்சியாளர் சரவணன் இப்பயிற்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.

விவசாயிகளுக்கு ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், அக்னி அஸ்திரம் உள்ளிட்ட வளர்ச்சியூக்கிகள், செயலூக்கிகள், பூச்சிவிரட்டிகள் போன்றவற்றை தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை குறித்த செயல்முறை விளக்கம் மற்றும் களப் பயிற்சி அளிக்கப்பட்டது. விவசாயிகளே தங்கள் கைகளால் இயற்கை இடுப்பொருட்களை தயாரித்தனர்.

இது தொடர்பாக ஈஷா விவசாய இயக்க பயிற்சியாளர் முத்துக்குமார் கூறியதாவது, ”விவசாயத்தில் ரசாயன உரங்களை பயன்படுத்துவதால் ஏராளமான பாதிப்புகளை மக்கள் அனுபவித்து வருகிறார்கள். இதய கோளாறு, சர்க்கரை வியாதி, சிறுநீரக கோளாறு போன்ற நோய்கள் வருகின்றன. முன்பெல்லாம், கேன்சர் நோய் மிகவும் அரிதாகவே இருந்தது. ஆனால், இப்போது நம் நெருங்கிய உறவினர்களுக்கு கூட கேன்சர் வரும் அளவுக்கு அதன் பாதிப்பு அதிகரித்துள்ளது.

கேன்சர் நோய் அதிகரித்து வருவதற்கு ரசாயன உரங்களின் பயன்பாடும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. மேலும், ரசாயன உரங்கள், பூச்சி கொல்லிகள் மற்றும் களை கொல்லிகளுக்காக தான் விவசாயிகள் அதிகம் செலவழிக்கின்றனர். பல விவசாயிகள் இதற்காக கடன் வாங்கி அதை திருப்பி செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

இந்த சூழலில் நஞ்சில்லா உணவை மக்களுக்கு கொடுக்க வேண்டும், விவசாயிகளும் பொருளாதாரத்தில் தற்சார்பு அடைய வேண்டும் என்பதற்காகவே இயற்கை இடுப்பொருள் தயாரிப்பு பயிற்சியை மாதந்தோறும் நடத்தி வருகிறோம். இப்பயிற்சியில் சொல்லிக்கொடுக்கும் இயற்கை இடுப்பொருட்களை விவசாயிகள் தங்களுடைய பண்ணையிலேயே தயாரித்து கொள்ள முடியும். இதற்காக வெளியில் இருந்து எவ்வித பொருட்களையும் வாங்க தேவையில்லை. இதனால், விவசாயி தன் செலவை குறைத்து நிகர லாபத்தை அதிகரிக்க முடியும்.

இதுமட்டுமின்றி, ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள், இளைஞர்கள் என பல தரப்பினரும் இயற்கை விவசாயம் செய்வதற்கு ஆர்வத்துடன் வருகின்றனர். ஆனால், சரியான வழிகாட்டுதல் இன்றி யூ-டியூப் வீடியோக்களை பார்த்து இயற்கை விவசாயம் செய்ய தொடங்குகின்றனர். முறையான பயிற்சியும் அனுபவமும் இல்லாததால் அவர்களில் பலர் தொடர்ந்து இயற்கை விவசாயம் செய்ய முடியாமல் பாதியிலேயே வெளியேறிவிடுகின்றனர். ஆகவே, அதுபோன்ற நபர்களும் எங்களுடைய பயிற்சியால் பயன்பெறுகின்றனர்” இவ்வாறு முத்துக்குமார் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here