மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடியில் அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

0
54
news

தூத்துக்குடி

மத்திய அரசின் புதிய திட்டங்களை கைவிட வலியுறுத்தி அனைத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இன்று நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெறுகிறது. அதன்படி தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் 10 இடங்களில் அனைத்து தொழிலாளர் சங்கங்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மட்டகடை பஜார் பகுதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு தொழிற்சங்க சிஐடியு தொழிற்சங்க மாநில செயலாளர் ரசல் தலைமை தாங்கினார்.

இதில் முன்னாள் எம்எல்ஏ சுடலையாண்டி, தொழிற்சங்க உறுப்பினர் குமாரவேல் உள்பட பலர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து தொழிற்சங்க உறுப்பினர் குமாரவேல் கூறுகையில்,

’’மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. தொழிலாளர் நலச்சட்டங்களை தொழிலாளர்களுக்கு எதிராக திருப்புகிறது. கரோனா ஊரடங்கு உத்தரவினை பயன்படுத்தி நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களையும், நாட்டின் கனிம வளங்களையும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்க்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசின் இந்த தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளால் மக்கள் கரோனாவினால் இறப்பதைவிட வறுமையினாலும் மக்கள் விரோத நடவடிக்கையினாலும் இறப்பது அதிகமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் மத்திய அரசின் மக்கள் விரோதப்போக்கை கண்டித்து நாடு தழுவிய அளவில் இந்த போராட்டம் நடைபெறுகிறது’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here