குலசை முத்தாரம்மன் கோவிலில் நேர்த்தி கடன்களை செலுத்திட அனுமதிக்க கோரிக்கை

0
91
kulasai muthaaramman

குலசை தசரா திருவிழாவில் காளி, அம்மன் வேடம் அணிந்து வரும் பக்தர்கள் கோவிலில் நேர்த்தி கடன்களை செலுத்திட அனுமதிக்கவேண்டும் என்று ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி, கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி காலபைவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டணத்திலுள்ள முத்தாரம்மன் கோவிலில் ”நவராத்திரி தசரா திருவிழா” ஆண்டுதோறும் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தசரா திருவிழாவில், தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து முத்தாரம்மனை தரிசித்து செல்வது வழக்கமாகும். இந்த வருடம் தசரா திருவிழாவினை வழக்கம்போல கொண்டாடுவதற்கு பக்தர்கள் தயாராகி வந்த நிலையில், தற்போதுள்ள கொரோனா வைரஸ் பரவல் சூழலில் இந்த வருடம் தசரா திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்றிட மாவட்ட நிர்வாகம் திடீரென தடை விதித்துள்ளது.

திருவிழா நாட்களில் பக்தர்கள் ஆன்லைன் முறையில் பதிவு செய்து இறை வழிபாடு செய்திடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதோடு, வரும் 17ம் தேதி நடைபெறவுள்ள கொடியேற்றம் மற்றும் 10, 11ம் நாள் திருவிழாக்களில் பக்தர்கள் யாரும் கலந்துகொள்ளக் கூடாது என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு மாத காலமாக ஒரளவிற்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு அனைத்துமத வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு மக்கள் இறைவழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்களின் இறை வழிபாட்டால் ஒரளவிற்கு கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்துள்ளதால் மக்கள் மனநிம்மதி அடைந்துள்ளனர். நோயின் தாக்கம் குறைவதற்கு பக்தர்களின் இறை வழிபாடும் முக்கிய காரணமாகும்.

இப்படிப்பட்டச்சூழலில், மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தல்படி குலசை தசரா திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்றிட அனுமத்திடவேண்டும். ஏனெனில், குலசை தசரா திருவிழாவிற்கு விரதம் இருக்கும் பக்தர்கள் காளி, அம்மன், போலீஸ், மருத்துவர் மற்றும் விலங்கு உருவம் உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.

வேடம் அணிபவர்களில் காளி, அம்மன் வேடம் அணியும் பக்தர்கள் 48நாட்கள் கடுமையான விரதம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில், காளி வேடம் அணியும் பக்தர்கள் கூட வழிபாடு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அதோடு இந்த திருவிழாவினை நம்பி இருக்கும் பிற கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, தமிழக அரசு இதில் உரிய கவனம் செலுத்தி, தசரா திருவிழாவிற்காக 48நாட்கள் கடும் விரதம் இருக்கும் காளி, அம்மன் வேடம் அணியும் பக்தர்களை மட்டுமாவது திருவிழாவின் முக்கிய நாட்களில் கோவிலில் சென்று தங்களின் வழிபாடுகளை நிவர்த்தி செய்திட அனுமதிக்கவேண்டும். இதுபோன்று மற்ற பக்தர்களும், பொதுமக்களும் அரசின் அறிவுறுத்தல்படி முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்து கோவிலுக்கு வந்து முத்தாரம்மனை வழிபட்டு செல்லவும் அனுமதிக்கவேண்டும்.

எந்தவிதமான இடையூறுகளும் இன்றி அனைத்து பக்தர்களும் தசரா திருவிழாவில் இறைவழிபாடு செய்வதற்கான ஏற்பாடுகளையும், திருவிழா நாட்களில் கோவிலில் சப்பரபவனி வழக்கம்போல நடந்திடவும் இந்துசமய அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல், சுகாதாரத்துறையினர் மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here