அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா

0
197
kulasai mutharamman

தூத்துக்குடி, அக்.8:

குலசேகரபட்டனம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொண்டாடுதலுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகததில் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி.,ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பல்வேறு துறைகளையும் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தினைத்தொடர்ந்து கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது, குலசேகரபட்டனம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வரும் 17ம் தேதி முதல் வரும் 28ம் தேதி வரை 12 தினங்கள் நடைபெறவுள்ளது.

இந்த திருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் 5லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், 144 தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் தாக்கம் குறைந்து வரும் நிலையில், தமிழக முதல்வரின் உத்தரவுகளால் பல்வேறு தளார்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கோவில்கள், வழிபாட்டு தலங்கள் திறக்க பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோவில்களில் பக்தர்கள் பாதுகாப்பாக வழிபட அரசின் சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. அரசின் வழிகாட்டுதலின்படி கோவிலின் உள்ளே பக்தர்கள் சென்று வழிபட எந்த தடையும் இல்லை. அதேபோன்று கோவிலுக்கு வெளிப்புறம் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதிக்கப்படவில்லை. எனவே கோவிலுக்குள் வரும் பக்தர்கள் எந்த வழியாக வர வேண்டும், எவ்வாறு பரிசோதனைக்கு உட்படவேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி வழிபாடு மேற்கொள்ளவேண்டும் போன்ற அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நமது மாவட்டத்தில் நடைபெறும் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் வரும் 17ம் தேதி நடைபெறும் கொடியேற்ற விழா, தொடர்ந்து 26ம் தேதி நடைபெறும் தசரா சூரசம்ஹார விழா அனைத்தும் கோவில் வளாகத்துக்குள்ளேயே நடைபெறும். இதில் பக்தர்கள் யாரும் கலந்துகொள்ள அனுமதி இல்லை. இதுபோன்று, 27ம் தேதி நடைபெறும் திருவிழா முடியும் நாள் அன்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

திருவிழா தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர், இந்து அமைப்புகள், திருவிழாக் குழுக்கள், தசரா குழுவினருடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் பக்தர்களுக்கு எவ்வாறு இடையூறு இன்றி திருவிழாவை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. முக்கியமாக கொரோனா நோய் தொற்று காலத்தில் நோய் பரவாமல் பக்தர்களை எப்படி அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

17ம் தேதி கொடியேற்ற விழாவில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை. 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை தினமும் காலை 6மணி முதல் இரவு 8மணி வரை பக்தர்கள் கோவிலுக்கு வர அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்கள் மற்றும் நேரடியாக வரும் பக்தர்கள் என தினமும் 8ஆயிரம் பேர் மட்டுமே வழிபடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

26ம் தேதி நடைபெறும் தசரா சூரசம்ஹார நிகழ்ச்சிகள் அனைத்தும் கடற்கரை பகுதியில் நடைபெறாது. இவை அனைத்தும் கோவில் பிரகார பகுதியிலேயே நடத்தப்படும். அன்றைய தினமும் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர அனுமதி இல்லை. இந்த முறை கடற்கரை பகுதியில் தங்குவது, கடைகள் அமைப்பது போன்ற எதற்கும் அனுமதி இல்லை. மேலும் கடற்கரை பகுதியில் எந்தவொரு நிகழ்ச்சியும் நடத்தவும் அனுமதி கிடையாது.

மேலும் பக்தர்கள் கோவிலின் உள்ளே வழிபாட்டுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். கோவிலில் தங்குவதற்கும், திருவிழா நேரத்தில் வளாக பகுதியில் கடைகள் அமைப்பதற்கும் இந்த முறை அனுமதி கிடையாது. வழக்கமாக இந்த திருவிழாவின் போது கிராம பகுதிகளிலுள்ள தசரா குழுக்களுக்கு கொடியேற்றத்திற்கு பிறகு ஒவ்வொரு செட் சார்பாக நிர்வாகிகள் காப்பு எடுத்து செல்லும் நிகழ்வு நடைபெறும்.

ஆனால், இந்த முறை முந்தைய ஆலோசனைக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பதிவு செய்யப்பட்ட தசரா குழுக்களில் ஒரு குழுவிற்கு இரு நிர்வாகிகள் என்ற வீதத்தில் வந்து தங்கள் செட்டுகளுக்கான காப்பு கயிறுகளை கோவில் அலுவலகத்தில் உரிய அத்தாட்சி கொடுத்து பெற்றுக் கொள்ளவேண்டும்.

பதிவு செய்யாத தசரா குழுக்கள் கோவில் நிர்வாகத்தினை அணுகி உடனடியாக இன்று(9ம் தேதி) முதல் 14ம் தேதிக்குள் பதிவு செய்திட வேண்டும். மேலும் கோவில் நிர்வாகத்தின் மூலம் புதியதாக பதிவு செய்தவர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு காப்புகளை பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் திருவிழாவின்பேது வேடம் அணிந்து மேளதாளங்களுடன் கோவில் பகுதிக்கு வருகை தர அனுமதி கிடையாது-. இதுபோன்று, பக்தர்கள் தங்கள் ஊர்களிலேயே காப்பு அணிந்து வேடமிட்டு விரத்தை முடித்துக் கொள்ளவேண்டும். தினசரி நடைபெறும் பூஜைகளில் உபயதாரர்கள், மண்டகபடிதாரர்கள் மட்டும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பூஜை முழுவதையும் உட்கார்ந்து பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், பக்தர்கள், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், தற்காலிக கழிப்பறை, பாதுகாப்பு வசதிகள், மருத்துவ முகாம்கள், ஆம்புலன்ஸ் வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையாக செய்து கொடுக்கப்படும்.

மேலும் காவல் துறை சார்பில் திருவிழாவின் போது ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் போலீசார் மூலமாக பல்வேறு பகுதிகளில் அமைக்கப்படும் தற்காலிக கூடாரங்களில் சமூக இடைவெளியில் அமர வைக்கப்பட்டு அங்கிருந்து கோவிலுக்கு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

திருவிழா தொடர்பான 12நாள் நிகழ்ச்சிகளும் பக்தர்களின் வசதிக்காக யூடிப் சேனல் மற்றும் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்திட கோவில் நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் பொதுமக்கள் நேரடியாக வருவதை தவிர்த்து திருவிழா நிகழ்ச்சியினை வீட்டில் இருந்து காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வழக்கமாக மற்ற மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த திருவிழாவை காண வருகை தருவார்கள் ஆனால், இந்த முறை இவற்றை தவிர்க்கும்படி பக்தர்களை கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் வெளியூர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது. அதோடு, கோவில் பகுதியில் வெளியூர் பக்தர்கள் யாரும் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே பக்தர்கள் நேரடியாக வருவதை தவிர்த்து யூடிப் சேனல் மற்றும் தொலைக்காட்சிகளில் திருவிழாவினை காணும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ஏனெனில் மக்கள் அதிகமாக கூடும்போது கொரோனா பரவுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதால் வெளிமாநில மக்கள் வருவதை தவிர்க்கவேண்டும். மேலும் வருகை தரும் பக்தர்கள் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றி உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைபிடித்திடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

திருக்கோவிலுக்கு வேடம் அணிந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. தரிசனத்தின்போது பக்தர்கள் ஒரு மீட்டர் இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். தேங்காய், பழம், பூ என எந்தவொரு பொருட்களையும் எடுத்து வருதல் கூடாது.

65வயதுக்கு மேற்பட்டவர்கள், உயர்ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள், சுவாசம் தொடர்பான நோய், இருதயநோய் உடையவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் திருக்கோவிலுக்கு வருவதை தவிர்க்கவேண்டும். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் பக்தர்களும் முழுஒத்துழைப்பு அளித்திடவேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here