தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவுக்கு உட்பட்ட சூளைவாய்க்கால் கிராமத்தை சேர்ந்தவர் பூலோக பாண்டியன் (வயது 48). கூலி தொழிலாளியான இவர் கடந்த 2017-ம் ஆண்டு வெளிநாடு செல்வதற்காக சிறுதொண்டநல்லூர் பூச்சிவிளையை சேர்ந்த சிவராமகிருஷ்ணன் என்ற சிவாவிடம் ஒரு லட்ச ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இந்த கடன் தொகைக்காக பூலோக பாண்டியனிடம் 2 வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து வெளிநாட்டிலிருந்து மாதாமாதம் வீட்டு செலவுக்கு அனுப்பும் பணத்தில் கடனுக்கான வட்டி தொகையையும் அவர் கட்டி வந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த பின்னரும் பல்வேறு தவணைகளாக அசல் மற்றும் வட்டி தொகையை சிறிது சிறிதாக செலுத்தி வந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக கடன் தொகை முழுவதும் செலுத்திய பின்பு, தான் எழுதிக்கொடுத்த கடன் பத்திரத்தை பூலோக பாண்டியன் திருப்பி கேட்டுள்ளார். ஆனால் கடன் பத்திரத்தை திருப்பி தர மறுத்ததுடன் மேலும் ஒரு லட்ச ரூபாய் தர வேண்டும் என கூறி சிவராமகிருஷ்ணன் அவரை மிரட்டி உள்ளார்.
எனவே கந்து வட்டி கேட்டு மிரட்டியது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிப்பதற்காக பூலோக பாண்டியன் தனது ஆதரவாளர்களுடன் வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிவராமகிருஷ்ணனிடம் வாங்கிய கடன் தொகை ஒரு லட்சத்திற்கு கந்துவட்டியாக ஒரு லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளேன். இதுதவிர அசல் தொகையில் 90 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளேன். அசல் தொகையில் மீதியுள்ள 10 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு கடனை முழுவதுமாக அடக்க சென்றபொழுது மேலும் ஒரு லட்ச ரூபாய் தரவேண்டும் என கூறி சிவராமகிருஷ்ணன் என்னை மிரட்டினார். எனவே கந்து வட்டி கேட்டு மிரட்டுவது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளேன்.
எனது புகாரின் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து கடன் பத்திரத்தை மீட்டு தர வேண்டும். மேலும் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் எனக்கும் எனது குடும்பத்துக்கும் பாதுகாப்பு அளித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.