ஜெயராஜ், பென்னிக்ஸை மிருகத்தனமாக தாக்கியிருக்கிறார்கள் – சிபிஐ குற்றப்பத்திரிக்கை

0
90
sathankulam news

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த ஜூன் 19ம் தேதி சாத்தான்குளம் போலீஸார் அழைத்து சென்றனர். அடுத்தடுத்து இருவரும் இறந்ததாக 22ம் தேதி போலீஸார் தகவல் தெரிவித்தனர். இந்த விவகாரம் விஸ்பரூபம் எடுத்தது. சி.பி.ஐ விசாரணை செய்து வருகிறது.

இந்த வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐக்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் எஸ்.எஸ்.ஐ பால்துரை உள்பட காவல்த்துறையினர் பத்துபேர் கைதானார்கள். இதில் பால்துரை உடல்நலக் குறைவால் இறந்துபோனார். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மேலும் விசாரணை மேற்கொண்டு வந்த சி.பி.ஐ அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் விசாரணையில் சற்று தொய்வு ஏற்பட்டது.

மீண்டும் விசாரணை தொடங்கிய சிபிஐ, தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பதாக தகவல் சொல்லப்படுகிறது. அதில்,’’ஜெயராஜ்- பென்னிக்ஸ் ஆகிய இருவரும் பொய்யான குற்றச்சாட்டில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள். இருவர் மீதும் சாத்தான்குளம் காவலர்கள் மிருகத்தனமான தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். காவல்நிலையத்திலுள்ள ஒரு டேபிளில் படுக்க வைத்து பின்புறத்தில் லத்தி, கம்பு போன்றவற்றால் தாக்கியுள்ளனர்.

கொடூரமான தாக்குதலால் இருவருக்கும் உடலில் பல இடங்களில் ரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. காவல்நிலையத்தின் கழிப்பறை, சுவர்கள் லத்தி, மேஜைகள் என பல்வேறு இடங்களில் தந்தை-மகன் இருவரது ரத்தங்கள் படிந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ரத்தக் கறைகளை மத்திய தடயவியல் துறையின் பரிசோதனைக்கு (CFSl) அனுப்பிய போது இந்த ரத்தக் கறைகள் இறந்துபோன தந்தை, மகன் டிஎன்ஏ உடன் பொருந்தியுள்ளது.

இந்த இரத்த மாதிரி ஜெயராஜ் மனைவி செல்வராணியின் DNA உடனும் பொருந்துகிறது. மேலும் காவல் நிலையத்தில் ரத்த கரைகளின் தடயங்களை குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினர் அழிக்க முயன்றுள்ளனர். இரவு முழுவதும் தாக்கப்பட்டதில் இருவரும் பலத்த காயம் அடைந்ததால், அதிகமான ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது. சிந்திய ரத்தங்களை காயம்பட்ட தந்தை மகன் இருவரும் மூலமே துடைக்க சொல்லியும் துன்புறுத்தி உள்ளனர். வீட்டிலிருந்து மாற்று உடைகள் கொண்டுவர சொல்லி இரண்டு முறை உடைகள் மாற்றப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் வினிலா, இவர்களை பரிசோதனை செய்தபோது அலட்சியமாக செயல்பட்டு இவர்களுடைய ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயை சான்றிதழில் குறிப்பிடாமல் அலட்சியமாக செயல்பட்டது மட்டுமின்றி சிறைக்கு அடைக்க இவர்கள் தகுதியானவர் என தகுதி சான்றும் கொடுத்துள்ளார். முறையாக சிகிச்சை அளிக்காமல் சிறையில் அடைத்துள்ளனர். இதனால் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இருவரையும் சிறையில் அடைக்கும் போது சிறை காவலர்கள் மற்றும் சிறை மருத்துவர் ஆகியோருடைய வாக்குமூலம், அவர்களுடைய ஆவணங்கள் மற்றும் உடலில் பல இடங்களில் இருந்த ரத்த காயங்கள். சிபிஐ அதிகாரிகளின் நேரடி விசாரணை மூலம் குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டது’’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here