சாயர்புரம் போப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் சைக்கிள் – எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ வழங்கினார்

0
65
shanmuganathan

சாயர்புரம்,ஜன.05:

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி,சாயர்புரம் போப் நினைவு பள்ளியில் 134 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ வழங்கினார்.

சாயர்புரம் போப் நினைவு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு நேற்று (05.01.2021) பள்ளித் தாளாளர் ஜெபர்சன் தலைமையில் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் அகஸ்டின் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ பள்ளியில் பயிலும் 134 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது, ‘’மாணவர்களின் நலன் காக்கும் மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு 1 முதல் 12 வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகம், விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி, ஊக்கத்தொகை போன்றவற்றை வழங்கி வருகிறது. பள்ளிக் கல்விக்கு மட்டுமே பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வது தமிழகத்தில் மட்டும்தான். மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடியார் அவர்கள் மாணவ, மாணவிகளின் கல்வி நலனில் தனி கவனம் செலுத்தி ஆட்சி நடத்தி வருகிறார்.

அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் மருத்துவ கனவை நினைவாக்கும் வகையில் மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு அமல்படுத்தியுள்ளது. அந்த அடிப்படையில் தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்த மாணவர்களுக்கு கல்விச் செலவை தமிழக அரசு ஏற்கும் என்றும் அறிவித்து சாதனை செய்துள்ளார். மாணவர்கள் இந்த சலுகைகளை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்று ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட அவைத் தலைவரும் மாவட்ட வேளாண் விற்பனை குழு உறுப்பினருமான வழக்கறிஞர் திருப்பாற்கடல், மாவட்ட கவுன்சிலரும் அதிமுக ஒன்றியச் செயலாளருமான அழகேசன், சாயர்புரம் பேரூராட்சி கழகச் செயலாளர் துரைச்சாமி ராஜா, ஸ்ரீவைகுண்டம் யூனியன் துணை சேர்மன் விஜயன், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் எப்ராஹிம், சிவத்தையாபுரம் சரவணகுமார் ராஜ், எட்வர்ட், பொன்சிங், பாலஜெயம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் சாலமோன் சாமுவேல் உள்ளிட்ட பலரும் இருந்தனர்.

விலையில்லா மிதிவண்டி பெற்றுக் கொண்ட மாணவர்கள் நன்றி கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here