தூத்துக்குடி ஒருங்கிணைந்த சேவை மையத்தினை அமைச்சர் கீதாஜீவன் அதிரடியாக ஆய்வு

0
49
geethajeevan

தூத்துக்குடி,ஜூலை17:

தூத்துக்குடி ஒருங்கிணைந்த சேவை மையத்தினை அமைச்சர் கீதாஜீவன் அதிரடியாக ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி ஒருங்கிணைந்த சேவை மையத்தினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், சமூகநல இயக்குநர் ரத்னா, சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர் வளர்மதி, கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோருடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அவர் அங்கு பாதிக்கப்பட்ட மகளிருக்கு ஆலோசனைகள் கூறும் பகுதி மற்றும் தங்கும் பகுதிகளை பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து, அமைச்சர் கீதாஜீவன் அடைக்கலாபுரம் செயின்ட் ஜோசப் அறக்கட்டளை புனித சூசையப்பர் மழலையர் இல்லத்தில் ஒரு வயதிற்க்கும் கீழ்பட்ட குழந்தைகள் பாதுகாக்கப்படுவதை பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலத்துறை மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகா, சமூக நல இயக்குநர் ரத்னா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் இயக்குநர் அமுதவல்லி, சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர் வளர்மதி, கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த சமூக நலத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தகூடிய அனைத்து வகையான திட்டங்கள் மற்றும் இந்த திட்டத்திலான பலன்கள் ஏழை, எளிய மக்களுக்கு விரைவில் சென்றடைய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

திருமண உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் விதிமுறைகளை பொதுமக்களுக்கு குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு விரிவாக எடுத்து சொல்லவேண்டும். திருமண உதவித்தொகை திட்டத்தில் பயனடைய பெண் குழந்தைகள் 10ம்வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்கவேண்டும். ஆனால் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திலுள்ள பெண்கள் 10ம்வகுப்பு படித்திருந்தால் போதுமானது.

சமூக நலத்துறையில் விரிவாக்க அலுவலர் பணி மிக முக்கிய பணியாகும். உங்களின் நடவடிக்கையின் மூலம்தான் ஏழை, எளிய மக்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் விண்ணப்பித்தவர்களின் மனுக்களை நேரில் சென்று விசாரிக்கவேண்டும்.

பெரும்பாலான மாவட்டங்களில் ஒருங்கிணைந்த சேவை மையம் புதியதாக திறக்கப்பட்டுள்ளது. குடும்ப சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் இங்கு இலவசமாக தங்கி பல்வேறு ஆலோசனைகள் பெற்றிட வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் விளம்பரப்படுத்திடவேண்டும்.

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் திருமண உதவித்தொகை திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை. அதற்கு தேவையான நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. 2018டிசம்பர் வரையிலான விண்ணப்பங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், 3லட்சத்து 34ஆயிரத்து 913விண்ணப்பதாரர்கள் உதவி கிடைக்காமல் உள்ளனர் என்றார்.

தொடர்ந்து அவர், 30 பயனாளிகளுக்கு இலவச மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களையும், 27 பயனாளிகளுக்கு 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வு தொகையினையும், தாய் தந்தை இறந்த 41 குழந்தைகளுக்கு தலா ரூ.6ஆயிரம் பராமரிப்பு உதவி தொகையினையும், கொரோனா தொற்றால் 2 பெற்றோர்களையும் இழந்த 2 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சத்திற்கான காசோலையினையும், 5 திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண தொகையாக தலா ரூ.2ஆயிரத்தையும், மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் 18 பயனாளிகளுக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இதில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி, கோபி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி மற்றும் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here