ஸ்டெர்லைட்டில் இதுவரை 2 ஆயிரம் மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி

0
12
sterlite news

தூத்துக்குடி, ஜூலை.22:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 2 ஆயிரம் மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்து 32 மாவட்டங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றின் 2-வது அலையின் தாக்கம் அதிகரித்த போது, மருத்துவ ஆக்சிஜன் தேவை அதிகரித்தது. இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி கடந்த மே மாதம் 13-ந் தேதி முதல் மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு இலவசமாக வழங்கி வருகிறது. இதுவரை 2 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் இருந்து, மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் உற்பத்தி 2 ஆயிரம் மெட்ரிக் டன் என்ற மைல் கல்லை வெற்றிகரமாக கடந்துள்ளது. நேற்று வரை 2006.36 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்து விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. இதனை தவிர இதுவரை 11.19 மெட்ரிக் டன் வாயு நிலையிலான ஆக்சிஜன் சிலிண்டர்களில் அடைத்து விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இவைகள் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், நாமக்கல், தருமபுரி, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, கரூர், சேலம், ஈரோடு, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கும்பகோணம், மயிலாடுதுறை, கோவை, நீலகிரி, திருப்பூர், திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய 32 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

எங்களது ஆக்சிஜன் விநியோக தகவல்கள் அனைத்தும், மத்திய அரசின் டிஜிட்டல் ஆக்சிஜன் கண்காணிப்பு அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆக்சிஜன் விநியோகம் துல்லியமாக கண்காணிக்கப்பட்டு, தேவையான பகுதிகளுக்கு உடனுக்குடன் அனுப்பப்படுகிறது. தொடர்ந்து ஆக்சிஜன் விநியோகத்தை சிறப்பாக செய்ய அனைத்து உதவிகளையும் செய்து வரும் தமிழக அரசுக்கும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்துக்கும், அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள், தொழிலாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆக்சிஜன் தவிர தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவ மனைகளுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களையும் ஸ்டெர்லைட் நிறுவனம் வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here