’’ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் காப்பர் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது” – மக்களவையில் பேசினார் மத்தியமைச்சர்

0
147
sterlite

’’ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் காப்பர் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது” என மக்களவையில்,மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கேள்வி ஒன்றிற்கு பதில் தெரிவித்திருக்கிறார்.

தூத்துக்குடியில் 20 ஆண்டுக்கு மேலாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் விரிவாக்க பணியை தொடங்கியது. அதனை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். விரிவாக்கத்துக்கு எதிராக தொடங்கிய போராட்டம், ’ஆலையை முழுவதுமாக மூடு’ என்கிற கோஷத்தோடு நிறம் மாறி வீரம் கொண்டது. அதற்கு அரசியல்வாதிகளும் சமூக ஆர்வலர்கள் என சொல்லக் கூடிய போராளிகள் பலரும் ஆதரவு கொடுத்தனர்.

போராளிகள் ஊட்டிய உற்சாகத்தினால் போராட்டம் உச்சநிலையில் உக்கிரம் கொண்டது. ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டனர். அதற்கு தன்னெழுச்சி என சொல்லப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் கிளம்பினர். அப்போது சிலர், போலீஸோடு முட்டிமோதியதில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது உலக செய்தியானது. மாநில அரசு ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூடியது.

முன்பு உலக அளவில் இந்தியா காப்பர் உற்பத்தியில் இரண்டாவது இடத்தை தொட யிருந்தநிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டதாகவும் அதனால் போட்டிபோட முயன்ற இந்தியா பின்னுக்கு தள்ளப்பட்டு சீனா அந்த இடத்தை பிடித்தது என்றும் அதேபோல் நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருந்த நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் உருவானது என்றும் அதன் மூலம் மத்திய மாநில அரசுகளுக்கு கெட்டபெயர் ஏற்பட்டது என்றும் அரசியல் நோக்கர்கள் சொல்லி வருகிறார்கள்.

அதேபோல் ஸ்டெர்லைட் நிறுவனம் நிறுத்தப்பட்டதால் பொருளாதார ரீதியாக தூத்துக்குடி மட்டுமில்லாது தமிழக வருவாயில் ஒரு பகுதி பாதிக்கப்பட்டிருக்கிறது என்றும் காப்பர் உற்பத்தி முடக்கப்பட்ட நிலையில் வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்றும் வணிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

’’ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்கி எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள்’’ என்று ஆலையை நம்பி தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் தற்போது கோரிக்கை வைத்து வருகிறார்கள். ’தூத்துக்குடி மாநகரில் ஏற்பட்டிருக்கும் மந்த நிலைக்கு ஆலையை மூடியதுதான் காரணமாக இருக்குமோ’ என்று மாநகரவாசிகள் சிலர் பேசிக் கொள்வதையும் பார்க்க முடிகிறது.

இதற்கிடையே ஆலையை திறந்து இயக்க வேண்டும் என ஆலை நிர்வாகம் முயற்சி எடுத்து வருகிறது. மாநில அரசோ அதற்கு முட்டுகட்டை போடும் வகையில் நீதிமன்றத்தில் வாதிட்டு வருகிறது. நிபந்தனைகளை ஏற்கிறோம் அதன்படி நடக்கிறோம் என ஆலை நிர்வாகம் உத்தரவாதம் கொடுக்கிறது. எந்த நிபந்தனையையும் ஆலை நிர்வாகம் பின்பற்றவில்லை என்று 20 ஆண்டுகளாக கண்காணித்து வரும் மாநில அரசு நிர்வாகம் ஆலைக்கு எதிராக புகார் சொல்லி வருகிறது. இந்த விவகாரம் நீதி மன்றத்தில் விவாத பொருளாக இருந்து வருகிறது.

இந்தநிலையில் ’’தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால்,இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட காப்பர் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது’’ என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்திருக்கிறார். மக்களவையில், கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த அவர், ’’இது தொடர்பாக கேர் என்ற நிறுவனம் 2009 ஆம் ஆண்டு வெளியிட்ட தர குறியீட்டின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு அதன் காரணமாக இந்தியாவில் உள்நாட்டு காப்பர் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், காப்பர் இறக்குமதி அதிகரித்து ஏற்றுமதி குறைந்துள்ளது. ஆண்டுக்கு சுமார் 4 லட்சம் டன், காப்பர் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக ஸ்டெர்லைட் நிறுவனம் விளங்கி வந்தது. அப்படிபட்ட நிறுவனம் இப்போது மூடப்பட்டிருக்கிறது’’ என்று அமைச்சர் தனது பதிலில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here