கோவில்பட்டி மருத்துவத்துறை அதிகாரிகள் மீது டார்ச்சர் புகார் – மருத்துவ தம்பதி எஸ்.பி ஆபீஸ் முன்பு தர்ணா

0
162
doctor news

கோவில்பட்டி மருத்துவத்துறை துணை இயக்குனர் மற்றும் கண்காணிப்பாளர் டார்சர் செய்வதாக கீழஈரால் அரசு பொது மருத்துவமனையில் வேலை பார்க்கும் மருத்துவர் ஆனந்த் மற்றும் வனிதா தம்பதியினர் தங்களது 5வயது மகனுடன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வனிதா செய்தியாளர்களிடம் கூறுகையில், தனது கணவர் மருத்துவர் ஆனந்தும் தானும் கீழ ஈரால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறோம். கடந்த ஐந்து வருடங்களாக பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறோம்.

ஜாதி ரீதியாகவும் பெண் என்பதாலும் என்னிடம் எதையும் வெளிக்காட்ட முடியாததால் எனது கணவரை கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாக்குகிறார்கள் கோவில்பட்டி மருத்துவத்துறை துணை இயக்குனர் போஸ்கோ ராஜாவும், கண்காணிப்பாளர் ராஜாவும். எனது கணவரின் முகத்தில் பேப்பரை வீசி எறிந்து இரண்டு பேரையும் வெளியே போ என சொல்லி அனுப்பி விட்டனர்’’ என்றார். மருத்துவர் ஆனந்த் கூறுகையில், நான் 2017 இல் இருந்து கீழ ஈரால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடமாடும் மருத்துவராக பணியாற்றி வருகிறேன். கண்காணிப்பாளர் ராஜா தூண்டுதலின்பேரில் கோவில்பட்டி மருத்துவத்துறை துணை இயக்குனர் போஸ்கோ ராஜா தனக்கு தேவையில்லாத மெமோ கொடுத்து வருகிறார்.

இது குறித்து சென்னையில் உள்ள எங்களது இயக்குனரிடமும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து நியாயம் கிடைக்காததால் இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்கிறோம் என்றார்.

அதனைத் தொடர்ந்து அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்க ஏற்பாடு செய்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதில் குற்றம் சாட்டப்படும் அதிகாரிகள் தங்களின் விளக்கத்தை வெளியிட விரும்பினால் அதையும் இத்துடன் இணைத்து வெளியிட தயாராக இருக்கிறோம்.

இந்த விவகாரம் குறித்து கோவில்பட்டி மருத்துவ வட்டாரத்தில் விசாரித்தோம், ‘’கோவில்பட்டி மருத்துவ வட்டாரத்தை பொருத்தவரை அதிகாரிகள் 2 பிரிவாக பிரிந்து செயல்படுகிறார்கள். அதிலும் குற்றம் சாட்டப்படுகிற ராஜா போன்றவர்கள் நீண்ட காலமாக அங்கே பணியில் இருப்பதால், அவருக்கும் அங்கு வரும் மருத்துவர்களுக்கும் இடையே பிடிப்பதில்லை. மருத்துவர் அல்லாத கண்காணிப்பாளர்தான் அவர். அவர் சொல்வதை மருத்துவர்கள் கேட்பதற்கு தயாரில்லை. அப்படி தான் சொல்வதை கேட்காத மருத்துவர்களை ராஜாவும் சும்மாவிடுவதில்லை. இப்படித்தான் நீண்டகாலமாக இங்கே ஈகோ பிரச்னை இருந்து வருகிறது. பிரச்னை உள்ள அனைவரையுமே இங்கிருந்து வெகு தூரத்திற்கு இடமாற்றம் செய்வது மட்டுமே இதற்கு தீர்வு’’ என்கிறனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here