மும்பை
மகாராஷ்டிராவில் 7-ம் தேதிக்குள் புதிய ஆட்சி அமையாவிட்டால், அதன்பின் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்படும் என பாஜக மூத்த தலைவர் சுதிர் முங்கந்திவார் கூறியதை கண்டித்துள்ள சிவசேனா, குடியரசு தலைவர் பாஜகவின் பாக்கெட்டில் இருக்கிறாரா என கேள்வி எழுப்பியுள்ளது.
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த 288 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில் சிவசேனா 56 இடங்களிலும், பாஜக 105 இடங்களிலும் வென்றன. ஆனால் ஆட்சியில் சமபங்கு வேண்டும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தி வருகிறார்.
இதனால் புதிய அரசு அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.இப்போது இருக்கும் சட்டப்பேரவைக் காலம் வரும் 8-ம் தேதியுடன் முடிகிறது. அதற்குள் புதிய ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
இந்த சூழலில் பாஜக மூத்த தலைவரும், நிதியமைச்சருமான சுதிர் முங்கந்திவார் தனியார் சேனல் ஒன்றுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறுகையில், ” விரைவில் புதிய ஆட்சி அமைப்பதற்கான பேச்சைத் தொடங்குவோம். 8-ம் தேதிக்குள் புதிய ஆட்சி அமையாவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்படும்” எனத் தெரிவித்தார்
இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியாகியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:
கூட்டணியில் சமமான பங்கு வேண்டும் என்பது தான் சிவசேனாவின் கோரிக்கை. 50:50 என்ற கோரிக்கையில் கட்சி உறுதியாக இருக்கிறது. ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களை மிரட்டும் வகையில் பாஜக நடந்து கொள்கிறது.
8-ம் தேதிக்குள் புதிய ஆட்சி அமையாவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்படும் என்பது மிரட்டல். அப்படி என்றால் குடியரசு தலைவர் உங்கள் பாக்கெட்டில் இருக்கிறாரா. மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைக்கப்படாமல் இருப்பதற்கு யார் காரணம். யாருடைய சுயநலத்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. பாஜக தலைவர்கள் இந்த மாநிலத்தையும், மக்களையும் அவமானப்படுத்துகின்றனர்’’ எனக் கூறியுள்ளது.