”கி.மு 8-க்கு முன்பே கொற்கை முக்கிய துறைமுகமாக செயல்பட்டிருக்கிறது” – அமைச்சர் தங்கம்தென்னரசு தகவல்

0
16

கி.மு 8-க்கு முன்பே கொற்கை முக்கிய துறைமுகமாக செயல்பட்டிருக்கிறது என்று கொற்கையில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கொற்கை துறைமுகம் சங்க காலத்தில் சிறந்து விளங்கிய வரலாறு கொண்டது. அதனை அடையாளம் காணும் கடல்சார் முன்கள ஆய்வு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அதனை இன்று(03.09.2022) தொழில்துறை, தமிழ் அலுவல் மொழி, தமிழ் கலாச்சாரம் மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், தூத்துக்குடி புதிய துறைமுகம் தலைவர் இராமசந்திரன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் பேசினார்.

’’தொல்லியல் துறை 2022 ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டம், கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்கள்( கொற்கை, அகரம், மணலூர்), தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி, தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை ஆகிய ஏழு இடங்களில் அகழாய்வு மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை தண்பொருநை (தாமிரபரணி) ஆற்றின் முகத்துவாரத்துக்கு எதிரில் கடல்சார் முன்கள ஆய்வு மேற்கொள்ளத்திடமிடப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி முதற் கட்டமாக சங்ககாலக் கொற்கைத் துறைமுகத்தின் தொல்லியல் வளத்தினைக் கண்டறிய கடல்சார் ஆய்வினை மேற்கொள்ள இந்திய கடலாய்வு பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கடலாய்வு மேற்கொள்ளப்படுகிறது.

சங்ககால பாண்டியர்களின் துறைமுகமாகப் போற்றப்படுகிற கொற்கை தண்பொருநை (தாமிரபரணி) ஆற்றிற்கு வடக்கே 3 கி.மீ தொலைவிலும், தற்போதைய கடற்கரையில் இருந்து 8 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. புகழ்பெற்ற தொல்லியல் பகுதிகளான ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை ஆகிய ஊர்கள் கொற்கைக்கு மேற்கே முறையே 15 மற்றும் 10 கி.மீ தொலைவில் தாமிரபரணி ஆற்றங்கரைகளில் அமைந்துள்ளன. சங்க இலக்கியங்களான அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய நூல்களும் சங்கமருவியக் காலத்தைச் சார்ந்த காவியமான சிலப்பதிகாரமும் கொற்கையைப் பற்றி விவரிக்கின்றன. இதுதவிர, “பெரிப்ளஸ் எரித்திரியன்கடல்“ என்கிற செங்கடல்வழி பயணநூலும் தாலமியின் நிலவியல் நூலும் கொற்கையை முறையே கொல்சிஸ் மற்றும் கொல்காய் என்றும் குறிப்பிடுகின்றன.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 1968-ஆம் ஆண்டு கொற்கையில் மேற்கொண்ட அகழாய்வில் நிலப்பகுதியிலிருந்து இரண்டரை அடி ஆழத்தில் ஆறு வரிசைகளில் ஒன்பது அடுக்குகளைக் கொண்ட செங்கல் கட்டுமானத்தினை வெளிப்படுத்தியது. மேலும், ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட மூன்று சுடுமண் உறைகள் செங்கல் கட்டுமானத்தின் கீழ் கண்டறியப்பட்டது. இதுதவிர, தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. கொற்கை அகழாய்வில் சேகரிக்கப்பட்ட கரிமத்தினை பகுப்பாய்வு செய்ததில் கொற்கையின் காலம் பொ.ஆ.மு. 785 என்று காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது.

பாண்டியர் காலத்தில் கொற்கை மிகச்சிறந்த துறைமுகமாக செயல்பட்டிருந்தது. மேலைநாட்டுடன் குறிப்பாக ரோம் நாட்டுடனும், இலங்கையுடனும், பெரும்பாலான தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனும் கடல்வழி வணிகம் நடைபெற்றுள்ளது. அகழாய்வாளர்கள் கொற்கையில் ரோமநாட்டு மட்கலன்களும், ரௌலட்டட் வகை பானை ஓடுகளையும் கண்டெடுத்துள்ளனர்.

அண்மையில் 2021 ஆம் ஆண்டு மேற்கொண்ட அகழாய்வில் கங்கைச் சமவெளியைச் சார்ந்த கி.மு 5-ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய வடஇந்திய கருப்பு வண்ண மெருகேற்றப்பட்ட பானைஓடுகளும் மற்றும் கருப்பு பூச்சுப் பெற்றுள்ள பானை ஓடுகளும் வெளிப்படுத்தப்பட்டன. இவை தமிழ்நாடானது இந்தியாவின் பிறபகுதிகளோடு குறிப்பாக கங்கை சமவெளி நகரங்களுடன் நெருங்கிய உள்நாட்டு வணிகம் நடைபெற்றுள்ளதைக் எடுத்துக்காட்டுகிறது. ஏற்கனவே மேற்கொண்ட அகழாய்வுகளில் பெறப்பட்ட கரிமப்பகுப்பாய்வுக் காலக்கணிப்பின்படி கி.மு 8-ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே கொற்கை மிகமுக்கியத் துறைமுகமாக செயல்பட்டிருந்ததை சுட்டிக்காட்டுகிறது.

தொல்லியல் களஆய்வு மற்றும் நிலஅகழாய்வு மேற்கொண்டுள்ளதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை தண்பொருநை (தாமிரபரணி) ஆற்றின் முகத்துவாரக்கு எதிரில் கடல்சார் முன்கள ஆய்வு மேற்கொள்ளத்திட்டமிடப்பட்டது. அதனடிப்படையில் முதற்கட்டமாக சங்ககாலக் கொற்கைத் துறைமுகத்தின் தொல்லியல் வளத்தினைக் கண்டறிய கடல்சார் ஆய்வினை மேற்கொள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இன்று முதல் முன்களஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாய்வில் கொற்கை துறைமுகத்தின் தொன்மையை கண்டறிய Multibeam Echosounding Sidescan Sonar and Subbottom போன்ற அறிவியல் தொழில்நுட்ப கருவிகளைக் கொண்டு கடல் மேற்பரப்பாய்வு கொள்ளப்படுகிறது. இவ்வாய்வில் வெளிப்படும் தரவுகளின் அடிப்படையில் எதிர்காலத்திட்டம் வடிவமைக்கப்படும்.

இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் எப்பொழுதும் இல்லாத அளவில் ரூ.15 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதைப்போல கொற்கையிலே கடல்சார் ஆய்வுகளும் செய்ய இருக்கிறார்கள். தொல்லியல் துறை ஆய்வாளர்கள் முறைப்படி இந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். கொற்கையிலே விளங்கியிருக்கக்கூடிய நாகரீகத்தை தெரிந்துகொள்ளும் வகையிலே நிலத்தினை ஆய்வு செய்யப்படுகிறது. கொற்கையிலே நாம் செய்திருக்கக்கூடிய ஆய்வுகள் 1968ல் இருந்து நடைபெற்று வருகிறது.

செய்திருக்கக்கூடிய ஆய்வுகள் சிந்துசமவெளியோடு உள்ள தொடர்பினை காட்டுகிறது. மெருகூட்டப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளது. பழைய கொற்கை துறைமுகம் எங்கே இருக்கிறது என்பதை கண்டறிய உள்ளது. இப்பொழுது உள்ள கொற்கையில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில், தாமிரபரணியில் இருந்து வடக்கே 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இன்னும் ஒரு வார காலத்திற்கு இந்த பகுதியிலே தூத்துக்குடிக்கும், திருச்செந்தூருக்கும் இடையே ஆய்வு செய்கிறார்கள்.

கிடைக்கக்கூடிய தரவுகளை வைத்து மீண்டும் ஆய்வுகளை செய்வோம். கொற்கையில் இருந்து தெற்கே இருக்கக்கூடிய தெற்காசிய நாடுகள், மேற்கே இருக்கக்கூடிய மேற்கத்திய நாடுகளுக்கு இடையே உள்ள தொடர்புகளை விளக்கக்கூடிய வகையில் இன்றைய ஆய்வுகள் பிற்காலத்திய ஆய்வுகளுக்கும் இது பெருமளவில் உதவியாக இருக்கும். பொருணை அருங்காட்சியகத்திற்கான நிலம் கையகப்படுத்தியுள்ளது. மிக விரைவிலே பணிகள் நடைபெறும் என தொழில்துறை, தமிழ் அலுவல் மொழி, தமிழ் கலாச்சாரம் மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தொல்லியல் துறை இயக்குநர் சிவானந்தன், தொல்லியல் துறை கல்வி மற்றும் ஆய்வு ஆலோசகர் பேராசிரியர் ராஜன், இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் பேராசிரியர் சிவகொழுந்து, தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here