உலகையே ஆட்டிபடைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் அடுழியத்தை ஒழிக்க உலக நாடுகள் பல்வேறு வழிகளில் போராடி வருகிறது. தேவையான மருந்துகளை கண்டுபிடிக்கும் வேலை ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும் தற்போது வைரஸிடமிருந்து மக்களை பாதுகாக்கிறது எப்படி என்கிற வழிகளை தேடுகிறது நாடுகள்.
மக்களிடையே தொடர்பினை முற்றிலுமாக தடுப்பது முதற்கட்டமான தற்காப்பு நடவடிக்கையாக கருதி, அதனை நிறைவேற்ற ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து வைரஸ் விரிவாக்கத்தை தடுக்கிறது உலகம். அந்த வகையில் இந்தியா, முதல் கட்டமாக 21 நாட்கள் ஊரடங்கை கொண்டுவந்தது. தற்போது அதை மே 3ம் தேதி வரை நீட்டித்திருக்கிறது.
வைரஸ் தாக்கத்தை குறைத்து, முற்றிலுமாக தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் முனைப்பு காட்டி வருகிறது. இந்த வேளையில் எந்த மாதிரியான சுய கட்டுப்பாடுகள் வேண்டும் என்பதை நாட்டு மக்களுக்கு அறிவுறித்தி வருகிறது இந்திய அரசு. மத்திய உள்துறை இணைச்செயலாளர் புண்யாசலிலாஸ்ரீவஸ்தவா டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது,
’’உரடங்கு காலத்தில் பொது இடங்களில் ஐந்து பேரோ அதற்கு மேற்பட்ட நபர்களோ கூடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பொது இடங்களில், பணி இடங்களில் எச்சில் துப்பாமல் இருக்க வேண்டும் இதை வழக்கத்தில் கொள்ள வேண்டும்.
உடல் நலமற்ற முதியோர்களும், சிறு குழந்தைகளை கொண்டு உள்ளவர்களும், வீடுகளில் இருந்து பணியாற்ற ஊக்குவிக்கப்பட வேண்டும். பணியிடங்களில் ’தெர்மல்’ பரிசோதனை செய்வதும், கை கழுவுவதற்கு சானிடைசர் திரவம் வழங்குவதும் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.
மதுபானம் குட்கா விற்பனை தடை செய்யப்பட வேண்டும் முக கவசம் அணிந்துதான் வெளியே வரவேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் அவசியம் இவற்றை அரசு கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்’’என்று தெரிவித்தார்.
மத்திய உள்துறை இணைச்செயலாளர் தெரியபடுத்தியிருக்கும் வேண்டுகோள்களில் ’பொது இடங்களில் எச்சில் துப்பாமல் இருக்க வேண்டும்’ என்பதை நிரந்தரமான சட்டமாக்குவது நல்லது. பெரும்பாலான நகரங்களின் பொது இடங்கள் சுத்தம் சுகாதாரம் இல்லாமல் போவற்கு இது போன்று எச்சில் துப்புவதே காரணமாகும்.
ரோட்டில் நடந்து போகும்போது எதில் வேண்டுமானாலும் துப்புவது, டூவீலர், பேருந்து, இரயி, கார் போன்ற வாகனங்களில் பயணிக்கும்போது மற்றவர்கள் குறித்து எந்த கவனமும் வைக்காமல் அப்படியே துப்பிவிடுவது சாதாரணமாகிபோய்விட்டது.
அப்படி துப்புவது மூலம் நோய் பரவும் என்கிற விழிப்புணர்வு இருக்கிறதோ இல்லையோ? அப்படிபட்ட துப்பும் நடவடிக்கை தவறென்கிற பயம் சிலருக்கு இல்லாமல் போய்விட்டது. அதனால் பொது இடங்களில் எச்சில் துப்புவது கடுமையான குற்றம் என்கிற சட்டத்தை அரசு உருவாக்க வேண்டும். இதெல்லாம் சுய ஒழுக்கத்தில் வரக் கூடியது. அது இல்லை என்கிற போது, அதை சட்டமாக்குவதை தவிர வேறு வழியில்லை.
இந்த வைரஸ் துன்பத்தை அனுபவித்து வரும் இந்த காலத்தில், அது குறித்து முடிவெடுத்து சட்டமாக்க வேண்டும். ஏற்கனவே இது சார்புள்ள சட்டம் இருந்தால் அதனை கடுமையாக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் ‘தூய்மை இந்தியா’ திட்டம் வெற்றி பெறமுடியும்.
nadunilai.com R.S.SARAVANAPERUMAL