ஊரடங்கு உத்தரவு காலத்தில் விதைச்சட்டங்களை மீறினால் கடும் நடவடிக்கை – விதைச்சான்று இயக்குநர் எச்சரிக்கை !

0
75
vithai news

ஊரடங்கு உத்தரவு காலத்தில் விதைச்சட்டங்களை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதைச்சான்று துணை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, கோவை விதைச்சான்று இயக்குநர் தட்சிணாமூர்த்தி அறிவுறுத்தலின்படி, விருதுநகர் விதை ஆய்வு துணை இயக்குநர் நாச்சியார் அம்மாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் விதை உற்பத்தி தொடர்பான விதை சுத்திகரிப்பு மற்றும் சான்று அட்டை பொருத்தும்பணி, அரசு மற்றும் தனியார் விதை உற்பத்தி நிலையங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கோடை பருவத்தில் கயத்தாறு மற்றும் கோவில்பட்டி வட்டாரங்களில் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகள் மூலம் பாசனம் பெறும் பகுதிகளில் நெல், பருத்தி, உளுந்து மற்றும் காய்கறி பயிர்களும், பாசன வசதி வேறு சில பகுதிகளில் நெல் பயிரும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

மேற்படி காலத்தில் விவசாயிகளுக்கு தேவையான விதைகள் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. விதை விற்பனையாளர்கள் அரசு உத்தரவுப்படி நேரக்கட்டுப்பாடு மற்றும சமூக விலகலை கடைபிடித்து விதை விற்பனை மேற்கொள்ளுமாறு விதைச்சான்று துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

நோய் தொற்று பரவுவதை தவிர்க்கும் வகையில், அவசர அவசியத்தை முன்னிட்டு, மாவட்டத்தின் சில பகுதிகளில் நடமாடும் விதை விற்பனை வாகனம் மூலம் விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு நேரடி விதை விற்பனை செய்யுமாறு விதைச்சான்றுத்துறை ஊக்கப்படுத்தியும் செயல்படுத்தியும் வருகிறது.

விதை ஆய்வு துணை இயக்குநர் மற்றும் விதை ஆய்வாளர்கள் மூலம் அனைத்து விதை விற்பனை நிலையங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டும் விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டும் வருகிறது. மேலும் மாவட்ட விதை பரிசோதனை நிலையம் தொடர்ந்து இயங்கி வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைப்பது தொடர்ந்து உறுதி செய்யப்பட்டு வருகிறது.

விதை விற்பனையாளர்கள் விதைச்சட்டப்படி விதை இருப்பு விபரப் பலகை மற்றும் விலைப்பட்டியல் ஆகியவற்றை முறையாக பராமரிக்கவேண்டும். விவசாயிகளுக்கு உடனுக்குடன் உரிய முறையில் கண்டிப்பாக பில் வழங்கவேண்டும்.

விதை விற்பனையின்போது அதிகபட்ச சில்லறை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது, விதை இருப்பு பதிவேடு முறையாக பராமரிக்க வேண்டும். இதில் ஏதேனும் குறைபாடு காணப்பட்டால் விதைச்சட்டம் 1966, விதை விதிகள் 1968, விதைக்கட்டுப்பாட்டு ஆணை 1983 ஆகியவற்றின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here