சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு காங்.கட்சி சார்பில் ரூ.10 லட்சம் – கே.எஸ்.அழகிரி வழங்கினார்

0
48
congress

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு காங்.கட்சி சார்பில் ரூ.10 லட்சம் தொகையை மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி வழங்கினார் . முன்னதாக காரில் சாத்தான்குளம் சென்ற அழகிரி, அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அதன் அருகே இருக்கும் ஜெயராஜின் செல்போன் கடையையும் பார்த்துவிட்டு அங்கிருந்து நடந்தே ஜெயராஜ் வீட்டிற்கு வந்தார். ஜெயராஜின் குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் கூறினார்.

சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் சாத்தான்குளம் காவல் நிலைய அதிகாரிகளால் கோவில்பட்டி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். ‘கடையை அடைப்பதில் தாமதம் ஆன விவகாரம்’ என அதற்கு அதிகாரிகள் காரணம் சொன்னார்கள். கடந்த 20ம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள், 22ஆம் தேதி அடுத்தடுத்து இருவரும் உயிரிழந்தனர்.

சாத்தான்குளம் காவல்நிலைய அதிகாரிகள் தாக்கியதில்தான் அவர்கள் இருவரும் இறந்தார்கள் என இறந்து போனவர்களின் உறவினர்கள் மற்றும் வியாபாரிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், சமூக அமைப்பினர் இறந்து போனவர்களின் உறவினர்களுக்கு உதவிகரமாக இருந்து வருகிறார்கள்.

இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி இச்சம்வத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து அந்த குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதோடு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிதி உதவி அளிக்கப்படும் என்றும் அந்த குடும்பத்திற்கு துணையாக நிற்போம் என்றும் தனது அறிக்கையில் கூறியிருந்தார். அதனடிப்படையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்திருக்கிறார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, ‘’காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சார்பில் நாங்கள் வியாபாரிகள் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம். அரசு மற்றும் காவல் துறை தரப்பில் வியாபாரிகள் உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் தரவில்லை என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

குற்றசெயல்புரிந்த காவலர்களுக்கு அரசும் காவல்துறையும் துணையாக போகக்கூடாது. தமிழக காவல்துறை கண்ணியமிக்கது. அதில் உள்ள சில கருப்பு ஆடுகளை பாதுகாக்க நினைத்தால் காவல்துறை மேல் சந்தேகம் எழும். தவறு செய்த காவல்துறையினரை கைது செய்யுங்கள். காங்கிரஸ் மற்றும் அதன் தோழமை கட்சிகள் ஏற்கனவே சிபிஐ விசாரணை கேட்டோம். ஆனால் உயர்நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு சிபி.ஐ விசாரணை செய்வோம் என முதல்வர் சொல்வது காலதாமதத்தை ஏற்படுத்த முதல்வர் செய்யும் தந்திரம். சிபி.ஐக்கு வழக்கு மாற்றப்பட்டாலும் சிறப்பு விசாரணை நடத்த வேண்டும்.

அரசும் காவல்துறையும் உடனடியாக இந்த சம்பவத்திற்கு உடனடியாக செயல்படவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்திற்கு வழிவகுத்து இந்த அரசு வீழ்வதற்கு காரணமாகும். யார் தவறு செய்தாலும் அவரை தண்டிக்க செய்வது தான் காவல்துறைக்கு அழகு. உயிரிழந்த வியாபாரிகள் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சார்பில் 10 லட்சம் நிதி வழங்கியுள்ளோம்.

மேலும் பேய்குளத்தில் ஒரு நபரும் இதே காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகளால் தாக்கபட்டு உயிரிழந்துள்ளார். அதேபோல தென்மாவட்டத்தில் 4 இடங்களில் காவல்துறையினர் தாக்கி 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வருகிறது இது குறித்தும் அரசு விசாரணை செய்யவேண்டும்’’ என்றார்.

கே.எஸ்.அழகிரியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், முன்னாள் எம்.பி., தனுஷ்கோடி ஆதித்தன், தெற்கு மாவட்ட செயலாளர் ஸ்ரீராமன், இளைஞர் காங்கிரஸ் ஜெயசீலன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here