ஆந்திராவில் திருமணம் என இ-பாஸ் பெற்று சென்னைக்கு ஆள் அனுப்பிய கும்பல் கைது – திருச்செந்தூர் போலீஸார் அதிரடி

0
179
thiruchendur police

ஆந்திராவில் திருமணம் நடக்க இருப்பதாக சொல்லி இ-பாஸ் பெற்று கொண்டு, சென்னைக்கு ஆட்களை கார் மூலம் அனுப்பிய கும்பலை திருச்செந்தூர் போலீஸார் மடக்கினர். அதிரடியாக கைது செய்த போலீஸாரை மாவட்ட எஸ்.பி பாராட்டினார்.

முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் நேற்று (12.07.2020) இரவு சுமார் 9 மணியளவில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் திருச்செந்தூர் முருகா மடம் சந்திப்பில் வாகன தணிக்கையில் மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த இன்னோவா காரை சோதனை செய்தனர். அந்த காரில் ஐந்துபேர் இருந்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அந்த நபர்களிடம் தலா ரூபா 3500 பெற்றுக் கொண்டு அவர்களை உடன்குடியிலிருந்து சென்னைக்கு இ.பாஸ் இல்லாமல் கொண்டுபோய் விட முயற்சி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்கள் ஆந்திராவில் திருமணம் நடப்பதாகவும் அங்கு போகிறோம் என இ.பாஸ் வைத்துக்கொண்டு சென்னைக்கு செல்ல முயற்சி செய்தது தெரிய வந்தது.

இது குறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்படி வாகன ஓட்டுனர் இடையன்விளை, தெற்கு தெருவைச் சேர்ந்த தேவசுந்தரம் மகன் மனோகர் யுவராஜா (37), வாகனத்தின் உரிமையாளர் உடன்குடி சுல்தான்புரத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் ராமச்சந்திரன் என்ற சந்திரன் (42), உடன்குடி, சிறுநாடார் குடியிருப்பு, மேலத்தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சுந்தரலிங்கம்(40), மேற்படி நபர்களுக்கு ஆந்திரா இ.பாஸ் பெற்று தந்த உடன்குடியைச்சேர்ந்த கணபதி மகன் ரவிச்சந்திரன் ஆகியோர்களை கைது செய்து, அவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் இவர்கள் லாக் டவுன் கடுமையாக உள்ள இந்த நிலையில் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுமார் 50க்கும் மேற்பட்ட நபர்களை இதுபோன்று அனுப்பி வைத்துள்ளதாக தெரிய வருகிறது.

விழிப்புடன் செயல்பட்ட திருச்செந்தூர் கோயில் காவல்நிலைய காவல்த்துறையினரை மாவட்ட எஸ்.பி ஜெ.ஜெயக்குமார் பாராட்டினார். மேலும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் டிராவல்ஸ் நிறுவனங்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here