தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி சிப்காட் பகுதியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு அரசாணை பிறப்பித்து மூடியது. இந்நிலையில் இன்றளவும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான எதிர்ப்பாகவும், ஆதரவாகவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் கரோனாவினால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சில்லாநத்தம், தெற்கு சிலுக்கன்பட்டி, ராஜாவின் கோவில், புதூர்பாண்டியாபுரம் உள்ளிட்ட ஊர் பஞ்சாயத்து தலைவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆடசியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து இன்று மனு அளித்தனர்.
தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’ஊரடங்கு உத்தரவினால் எங்கள் ஊர் பகுதியில் மக்கள் வேலையின்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்த காலத்தில் அதில் வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். தற்பொழுது ஆலை மூடி உள்ளதால் வேறு வேலைக்குச் செல்ல வழியில்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவித்து வருகிறார்கள். ஆகவே மக்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்காக ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கு நடைபெறுவதால் நீதிமன்ற நடவடிக்கை உத்தரவுபடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் ’’என்றனர்.
மேலும் கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கும் மனு அனுப்பி வைத்தனர்.