பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் பதிவு செய்திட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஊமைத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாடு முழுவதும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு வங்கிகள் மூலமாக வருடத்திற்கு 6ஆயிரம் கவுரவ உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் ஏராளமான விவசாயிகள் பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்து கவுரவ உதவித்தொகை பெற்று பயன் அடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு வருடத்திற்கு மூன்று தவணையாக ரூ.6ஆயிரம் கவுரவ உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இத்திட்டத்தில் இதுவரை தங்களது பெயர்களை பதிவு செய்யாத விவசாயிகளும் பதிவு செய்து பயன்பெற்றிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த திட்டத்தில் இதுவரை பெயர்களை பதிவு செய்யாத விவசாயிகள் தங்களின் ஆதார் கார்டு, ரேசன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் சிட்டா நகலுடன் தங்கள் பகுதிகளுக்குட்பட்ட வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் வேளாண்மை விரிவாக்க மையத்தினை உடனடியாக தொடர்புகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.