ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேயன்விளையில் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை திருட்டு – சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்து, குற்றவாளியை விரைந்து கண்டுபிடிக்க திருச்செந்தூர் டி.எஸ்.பி பாரத் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேயன்விளை ஏ.ஐ.டி.யூ.சி காலணியில் சுதர்சன் செல்வபாபு என்பவர் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இவர் குவைத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சுதர்சன் செல்வபாபு மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் மேற்படி பேயன்விளையில் உள்ள அவர்களது வீட்டை பூட்டிவிட்டு நேற்றும் முன்தினம் (05.09.2020) மாலை காயல்பட்டினம் கோமன்புதூரில் உள்ள அவரது உறவினர் இறந்த வீட்டிற்கு சென்றுள்ளனர்.

நேற்று இரவு சுதர்சன் செல்வபாபு அவரது மனைவிக்கு போன் செய்து, பேயன்விளையில் உள்ள அவர்களது வீட்டில் உள்ள கேமரா ஆஃப் காட்டுகிறது, அதை என்னவென்று பார்க்கச் சொன்னதால், சுதர்சன் மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் இன்று (07.09.2020) காலை பேயன்விளையில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கேமராவை திருப்பி, கேமரா வயரை அறுத்து, வீட்டு பீரோவிலிருந்த 35 ¾ பவுன் நகையை திருடிச்சென்றுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து சுதர்சன் செல்வபாபு ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பேயன்விளையில் உள்ள சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து, திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பாரத் அவர்கள் மேற்பார்வையில் ஆறுமுகநேரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. செல்வி, உதவி ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து குற்றவாளியை விரைந்து கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.