திருச்செந்தூர் முருகன் கோயிலில் அநீதியை அழிக்கும் அடையாளமான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது

0
175
thiruchendur murugan

திருச்செந்தூர், நவ. 20

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடந்தது. முதன் முறையாக பக்தர்கள் யாரும் இல்லாத நிலையில் சம்ஹார நிகழ்ச்சி நடந்தது.

அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடக்கும் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 15ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலையில் யாகசாலை பூஜைகள் நடந்தது. இந்தாண்டு கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழக அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் படி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கோயில் வளாகத்தில் விரதமிருக்க பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதே போல் விழா நாட்களில் தினமும் 10 ஆயிரம் பேர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கலயாண நிகழ்ச்சியில் கலந்த கொள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியளிக்கப்படவில்லை.

இந்நிலையில் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. காலை 6 மணிக்கு யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளியதும் யாகசாலை பூஜைகள் துவங்கியது. காலை 8.30 மணிக்கு யாகசாலையில் பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் நடந்தது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், பகல் `11 மணிக்கு உச்சிகால தீபாராதனை ஆனதும் மூலவருக்கு சஷ்டி சிறப்பு தீபாராதனை நடந்தது.

அதன்தொடர்ந்து யாகசாலையில் பகல் 12 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதருக்கு மகா தீபாராதனை நடந்தது. பின்னர் வேதபாராயணம், தேவாரம், திருப்புகழ் பாடப்பட்டது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்கசப்பரத்தில் வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மதியம் 2.15 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தை வந்து சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு மகாதீபாராதனை நடந்தது.

பின்னர் மாலை 4.00 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி துவங்கியது. வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு கோயில் கடற்கரை முகப்பில் சம்ஹார நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக சூரபத்மன் சிவன் கோயிலிருந்து நேரடியாக கோயில் கடற்கரைக்கு படை பரிவாரங்களுடன் வந்திருந்தான். முதலில் முதலில் யானை தலையுடன் கூடிய கஜமுகசூரன் போரிடம் நிகழ்ச்சி நடந்தது. முருகப்பெருமான் தனது வெற்றி வேலால் கஜ முக சூரனை வீழ்த்தினார். அதனை தொடர்ந்து மீண்டும் சிங்கமாக மாறி சூரன் போரிடும் நிகழ்வு நடந்தது. சுவாமி ஜெயந்திநாதர் தனது வேலால் சிங்க முக சூரனை வீழத்தினார். பின்னர் சூரன் தனது சுயரூபத்துடன் போர் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

அதன்பிறகு செந்திலாண்டவர் தனது வெற்றி வேலால் சூரபத்மனை வதம் செய்தார். பின்னர் சேவலும் மாமரமாக மாறி போரிட்டான். சுவாமி ஜெயந்திநாதர் சூரனை சேவலமாக மாமரமாக ஆட்கொண்டார். பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து கோயில் 108 மகாதேவர் சன்னதியில் சாயாபிஷேகம் எனப்படும் கண்ணாடி பிம்பத்திற்கு அபிஷேகம் நடந்தது.

இந்தாண்டு சூரசம்ஹாரம் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படாததால் பக்தர்களின்றி விழா நடந்தது. வீடுகளில் விரதமிருந்த பக்தர்கள் சம்ஹாரம் முடிந்ததும் விரதத்தை நிறைவு செய்தனர். சூரசம்ஹார விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ளாத நிலையல் கடற்கரையில் நிகழ்ச்சியை யாரும் காண முடியாத படி தகர சீட்டுகளால் மறைக்கப்பட்டிருந்தது. நகரில் வெளியூர் வாகனங்கள் வர முடியாத வகையில் 7 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

தர்ம ஆதினம் 27வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த சுவாமிகள், தக்கார் கண்ணன் ஆதித்தன், கோயில் இணை ஆணையர் கல்யாணி, உதவி ஆணையர் செல்வராஜ், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயகுமார், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், ஆட்.டி.ஓ தனப்பிரியா, திருச்செந்தூர் ஏ.எஸ்.பி. ஹர்ஷ் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர்.

சம்ஹார நிகழ்ச்சி துளிகள்
* கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் இல்லாமல் முதன் முதலாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.
*வழக்கமாக கடற்கரையில் வதம் செய்யும் நிகழ்ச்சி நான்கு இடங்களில் நடக்கும். இம்முறை கோயில் கடற்கரையில் முகப்பில் 300 அடி நீளம் உள்ள இடத்தில் தகர சீட்டுகளால் சுற்றியும் அடைக்கப்பட்ட இடத்தில் சம்ஹாரம் நடந்தது. நான்கு தலைகளும் வதம் செய்யும் நிகழ்ச்சி ஒரே இடத்தில் நடத்தப்பட்டது.
* சூரனை வதம் செய்யும் நிகழ்வின் போது வானத்தில் கருடன் வட்டமிட்டது.
* சூரசம்ஹார தினமான நேற்றுபகலில் கோயில் பகுதியில் மழை கொட்டியது. ஆனால் சம்ஹாரம் நிகழ்சசி துவங்க சில மணி நேரங்களுக்கு முன்பு மழை பெய்யாமல் நின்றது.
* சிகர நிகழ்ச்சியான சம்ஹார விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். கடற்கரையில் மணலை கூட அள்ள முடியாத அளவிற்கு கூட்டம் இருக்கும். கொரோனா தடுப்பு நடவடிக்கையால் முற்றிலும் மாறுபட்ட சம்ஹார நிகழ்ச்சியாக அமைந்தது.
* கோயில் நகரில் பக்தர்கள் இல்லாவிட்டாலும் எங்கு திரும்பினாலும் போலீசாரும், அவர்களது வாகனங்களும் அணிவகுந்து சென்றன. கடற்கரையில் சம்ஹாரம் நடந்த இடத்திலும் சுவாமி ஜெயந்திநாதர் சீர்பாதம், சூரன் சீர்பாதம், பண்ணையார் சமுதாயத்தினர், கோயில் திரிசுதந்திரர்கள் என சுமார் 2 ஆயிரத்திற்கு குறைவான பக்தர்கள் மட்டும் இருந்தனர்.
* முதன் முதன்முதலாக இந்த விழாவில் அமைச்சர்கள், ஐகோர்ட் நீதிபதிகள், முக்கிய அரசியல் கட்சிகள் பிரமுகர்கள் இல்லாமல் சம்ஹாரம் நடத்தப்பட்டது.
* கடற்கரையில் யாரும் நுழைய முடியாதப்படி சுற்றிலும் தடுப்பு வேலிகள் ஏற்படுத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கூட கடலில் புனித நீராட அனுமதிக்கப்படவில்லை.
* பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முந்தைய தினமே அனைத்து விடுதிகள், மடங்களில் உள்ள பக்தர்கள் வெளியேற்றப்பட்டனர். நகரில் 7 இடங்களிலும், மாவட்டம் முழுவதும் 15 இடங்களிலும் போலீசார் சோதனை சாவடி அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
* கந்த சஷ்டி விழாவின் 7ம் நாளான இன்று(21ம் தேதி) திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. வழக்கமாக திருக்கல்யாணத்தை முன்னிட்டு தெப்பகுளம் சந்திப்பில் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கும். ஆனால் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி கோயில் உள்பிரகாரத்தில் 108 மகாதேவர் சன்னதி முன்பு நடக்கிறது. அங்கே நள்ளிரவு 11 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்கபெருமான் & தெய்வானை அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. இதிலும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here