நாட்டின் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது பாஜக அதேவேளை தமிழகத்துக்குள் பாஜகாவால் கால் ஊன்றமுடியாத நிலை இருந்து வருகிறது. எப்படியாவது தமிழகத்துக்குள்ளும் நுழைந்துவிட வேண்டும் என பாஜக முயற்சி எடுத்து வருகிறது.
தமிழகத்துக்குள் விட்டுவிடவே கூடாது என பல அரசியல் கட்சிகள் சேர்ந்து தடுத்து வருகின்றன. மதவாத அரசியல் செய்யும் பாஜக தமிழகத்துக்குள் வரக் கூடாது என்று அதற்கு காரணம் சொல்லியே வந்திருக்கிறது பாஜகவுக்கு எதிரான கட்சிகள். ஆனால் சமீபத்திய அரசியல் மதம் குறித்த வார்த்தை பாஜகவுக்கு சாதகமாக போய்விடும் என உணர்ந்த கட்சிகள், பாஜகவை மத வாத கட்சி என்று சொல்வது இல்லை. அதற்கு மாறாக மத்திய பாஜக அரசு கொண்டு வரும் திட்டங்கள் குறித்து சொல்லி அரசியல் செய்து வருகிறது.

ஆனால் பாஜகவும், பிரதமர் மோடியும் தமிழர் கலாசாரத்திற்கு, பண்பாட்டிற்கு ஆதரவாக பேசி தமிழர்களை கவரும் யுக்தியை கையாண்டு வருகிறார்கள். மெல்ல மெல்ல தமிழர்கள் மனதில் இடம்பிடித்துவிட வேண்டுமென பாஜக நினைக்கிறது. அதை மையமாக வைத்தே காய் நகர்த்தி வருகிறது.
இந்தநிலையில் கொண்டாடப்பட்டு வரும் தமிழ் திருநாளான பொங்கல் திருநாளில் தமிழகத்திற்கு படையெடுத்தனர் பாஜகவினரும், காங்கிரஸ் கட்சியினரும். பாஜக சார்பில் அக்கட்சியின் தேசியத் தலைவர் நட்டாவும், காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் வந்து சென்றிருக்கிறார்கள்.
மத்தியரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துவரும் வேளாண் சட்டத்திருத்த சட்டத்தை எதிர்க்க உதவும் என்கிற வகையில் விவசாய மக்களின் விழாவான பொங்கல் விழாவுக்கு வந்தார் ராகும். ‘’மத்தியரசு விவசாயிகளை அழிக்க முற்படுகிறது’’ என்றும், ‘’தமிழர் கலாசாரம் பாதுகாக்கபட வேண்டும்’’ என்றும் அவர் பேசினார். மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்த்து ரசித்த ராகுல், பொதுமக்கள் மத்தியில் உற்கார்ந்து சாப்பிட்டார். எளிமையான தலைவர் என்று பேசவைத்துவிட்டு சென்றார்.

பாஜக சார்பில் அக்கட்சியின் தேசியத் தலைவர் தமிழகத்திற்கு வந்தார். துக்ளக் வார இதழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், ’’மத்திய மோடியரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. அப்படி கொண்டு வரும் திட்டங்களை தமிழ் நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் ஏற்கின்றன. இதன்மூலம் நாட்டின் வளர்ச்சியை பிரதமர் மோடி உறுதி செய்திருக்கிறார். நாடுமுழுவதும் பாஜகவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. நிச்சயமாக தமிழகத்திலும் தாமரை மலரும். அதற்காக நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் பாஜகவை ஆதரிப்போர் அதிகரித்து வருகிறார்கள். பலதுறையை சேர்ந்தவர்களும் பாஜகவில் விரும்பி வந்து இணைகிறார்கள்’’ என்றவர், ’’ஆளுமை மிக்க தலைவர் மறைந்த பின்னரும் திறந்த ஆளுமை திறனோடு ஆட்சியை நடத்தும் எடப்பாடி பழனிச்சாமியை பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது’’ என்று பேசினார். பின்னர் கட்சி மதுரவாயலில் நடத்தப்பட்ட நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஆக, இரண்டு தேசிய கட்சிகளும் தமிழர் பாரம்பரியத்தை, கலாசாரத்தை,பண்பாட்டை சொல்லி வாக்கு சேகரிக்க தொடங்கியிருக்கிறது. இதில் யாருக்கு வாய்ப்பு கொடுக்கப்போகிறார்களோ மக்கள். தமிழர் கலாசாரத்தையும், பண்பாட்டையும், உண்மையில் பாதுகாப்பது யார்? என்பதே தற்போது தமிழர்கள் மத்தியில் எழுந்திருக்கும் கேள்வியும் விவாதம்.!
-நடுநிலை.காம் ஆர்.எஸ்.சரவணப்பெருமாள்