தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவுவதை தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பொது மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளுக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் கடைகள் நேர கட்டுப்பாட்டுடன் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி சந்தையில் தானியங்கி கிருமிநாசினி தெளிப்பான் சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது.
சந்தைக்கு காய்கறி வாங்கவரும் பொதுமக்கள் கிருமிநாசினி சுரங்கப்பாதை வழியே உள்ளே அனுமதிக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவர் பாபு செல்வகுமார் கூறுகையில்,
”முகப்பு வாயிலில் தானியங்கி கிருமிநாசினி தெளிப்பான் அமைக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஏனெனில் வேகமாக பரவி வரும் கரோனா வைரஸ் தடுக்கும் விதமாக தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டுள்ள இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பொது மக்களும் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய தினசரி வந்து பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். தங்களுக்கு தேவையான காய்கறிகளை மொத்தமாக வாங்கி வைத்து பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்” என்றார்.