’’தூத்துக்குடி மாவட்டத்தில் நடக்கும் மணல் கொள்ளையை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை’’ – காந்திமதிநாதன் அறிக்கை

0
344
news

தூத்துக்குடி மாவட்டத்தில் நடக்கும் மணல் கொள்ளையை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்று சமூக ஆர்வலரும் அனைத்து விவசாயிகள் மக்கள் முன்னணி அமைப்பின் நிறுவனர் – தலைவருமான S.M .A . காந்திமதிநாதன் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், அரசின் கவனத்துக்கும் தெரியபடுத்தி வருகிறார்.

காந்திமதிநாதன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

’’வேலியே பயிரை மேய்வது போல் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு ஆற்று படுகைகளில் உள்ள மணல் கடந்த இரண்டு மூன்று மாதமாக மணல் மாஃபியாக்களால் சூறையாடப்பட்டு வருகிறது.

மணல் கடத்தல் எல்லாமே வணிக ரீதியாக வியாபார நோக்கில் அள்ளப்படுகிறது இதை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாமலும் தட்டி கேட்க முடியாத சூழலும் இருக்கிறது. ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி கூட்டணியில் விளாத்திகுளம் வட்டம் ,எட்டையாபுரம், ஏரல், திருவைகுண்டம் வட்டங்களில் மணல் வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது.

2018-ம் ஆண்டு ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு முன்பாக எங்களால் வைப்பாறு ஆறு மற்றும் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும் என்று துண்டு பிரசுரங்களை அச்சடித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திட பிரசாரம் மேற்கொண்ட போது ஆற்று மணல் தற்போதைய ஆட் சியாளர்களால் சுரண்டப்படுவதை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினோம்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்ற பின் நடைப்பெற்ற திங்கட்கிழமை பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் 24.07.2018 நடைபெற்ற போது ஆற்று மணல் கடத்தல் சம்பந்தமாக விளாத்திகுளம் பகுதிகளில் சிலர் விதிகளை மீறி ஆற்று மணலை கடத்துவதாக தகவல் கிடைத்துள்ளது ஆற்று மணல் அள்ளுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆனால் இன்று நடக்கும் மணல் கொள்ளையில் யார் மீது குண்டர் தடுப்பு காவலை ஏவுவார்?

கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் தற்போதைய ஆளும் கட்சியின் தலைவியான ஜெயலலிதா மணல் கொள்ளையை கூண்டோடு ஒழிப்பேன் என்று அறைகூவல் செய்தார் ஆட்சியை பிடித்தார் பின்னர் நடந்தது தலைகீழ் மாற்றம் தான். இப்போதும் ஜெயலலிதாவின் ஆட்சியை தான் நடத்துவதாக கூறுகிறார்கள் மணல் கொள்ளைக்கு துனைபோகும் ஆட்சியாளர்கள்.

நத்தை குட்டை நாகேந்திரன் என்பவர் கடந்த 2016ம் ஆண்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த பொதுநல வழக்கில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் 13 மாவட்டங்களில் சவுடு மண் அள்ள மாண்புமிகு நீதியரசர்களால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வழக்கோடு என்னுடைய பொது நல வழக்குகளான WP(MD) No : 21678/2017 மற்றும் 17 370/2019 ஆகிய இரு வழக்குகளும் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையால் இணைக்கப்பட்டு வழக்குகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தடை ஏற்படுத்தப்பட்ட திரு.நாகேந்திரன் வழக்கை நடத்த விருப்பமில்லை என்றுவாபஸ் பெறுவதாக நீதிமன்றத்தில் மனு செய்த போது நீதிமன்றம் அதை ஏற்காமல் மனு தாரரான நாகேந்திரனை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இந்த வழக்கில் நானும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணனும் வாதியாக இருந்து வருகிறோம்.

சவுடு மண்ணிற்கான தடை உத்தரவு நீதிமன்றத்தால் தளர்த்தபடவில்லை வழக்கு நடந்து வருகிறது. சவுடு மண்ணிற்கு தானே நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது என்று புத்திசாலிதனமாக மாவட்ட நிர்வாகம் தற்போது புதிய மண் வகையை கண்டுபிடித்துள்ளது அதாவது உபரிமண் அனுமதி என்று மணல் மாஃபியாக்களுக்கு உதவிடும் வகையில் அனுமதியை கனிமவளத் துறையால் அனுமதி வழங்க மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என்றே தெரிகிறது.

எட்டையாபுரம் வட்டம் கீழ் நாட்டு குறிச்சி, தாப்பாத்தி, விளாத்திகுளம் பல்லாகுளம் மற்றும் ஆற்றங்கரை பகுதி, ஏரல் வட்டம் பொட்டல் மற்றும் முக்காணி திருவைகுண்டம் வட்டம் தோழப்பன் பண்ணை மற்றும் கலியாவூர் ஆகிய இடங்களில் மணல் நூற்று கனக்கான லாரிகளில் தினந்தோறும் அள்ளப்பட்டு வியாபாரத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது இதை மாவட்ட நிர்வாகம் வேடிக்கை பார்த்து வருகிறது.

ஆற்று மணல் லாரிகளை வருவாய்த்துறையினரோ அல்லது காவல்துறையினரோ பிடிக்க கூடாது என்று அனைத்து வட்டாட்சியர்களுக்கும் காவல்துறையினருக்கும் மேலிடத்தில் உள்ள செல்வாக்கு உள்ள நபர்களால் மாவட்ட நிர்வாகத்தின் வழியாக வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாராவது மணல் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தார் என்று தெரிய வந்தால் அந்த அதிகாரி உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்கள். சமூக ஆர்வலர்கள் மிரட்ட படுகிறார்கள் அல்லது பணிய வைக்கப்படுகிறார்கள்.

இந்த மணல் கொள்ளையால் மழை மறைவு மாவட்டமான தூத்துக்குடியில் தற்போது அக்டோபர் 17 முதல் வடகிழக்கு பருவ மழை பெய்து வந்த போதும் நிலத்தடி நீர் மட்டம் உயரவில்லை என மாநில நில மற்றும் நீர் வள ஆதார விபர குறிப்பு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 18 மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் உயரவில்லை என பகீர் தகவலை தெரிவித்துள்ளார்கள் இப்படி ஒவ்வொரு ஆட்சியாளர்களும் ஆற்று மணல் மீது தொடர்ந்து கை வைத்து வரும் பட்சத்தில் இன்னும் சில ஆண்டுகளில் ஆறுகளே கானாமல் போய்விடும் குடிநீர் தேவை அதிகரிக்கும் பட்சத்தில் நிலத்தடி நீரும் இல்லாமல் போய்விடும்.

இறையாண்மை என்பது நாட்டு பற்று மட்டுமல்ல சுற்றுசூழலும் சேர்த்து தான்சூழல் சரியாக இல்லாவிட்டால் மக்களும் சரியாக வாழ முடியாது தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் மணல் கொள்ளையை எதிர்த்து மீண்டும் வரும் 4-ம் தேதி நீதிமன்றம் படி ஏற உள்ளேன்’’ இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் காந்திமதிநாதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here