ஆட்சியிலும், கட்சியிலும் அதிரடி நடவடிக்கை எடுப்பார் மு.க.ஸ்டாலின் !

0
123
m.k.staline

மகா பெரிய மந்திரியானாலும் உச்சபட்ச அதிகாரியே ஆனாலும் சிறிய தவறு செய்தால் கூட தூக்கி அடிப்பவர் ஜெயலலிதா. அவரது அத்தகைய அதிரடியை நினைத்து அமைச்சர்களும், அதிகாரிகளும் எப்போதுமே அச்சத்தில் இருப்பார்கள். நடக்க வேண்டிய வேலை தங்கு தடையின்றி தானாக நடந்து கொண்டே இருக்கும்.

அத்தகைய அதிகாரம் படைத்தவர்கள் அதிமுகவில் தற்போது இருக்கிறார்களா என்றால் இப்போதைக்கு அந்த அளவிற்கு இல்லை என்றே சொல்ல வேண்டும். ஒரு வேளை மீண்டும் அதிமுக ஆட்சி வந்திருந்தால் எடப்பாடி பழனிச்சாமி குறைந்தபட்சம் ஜெயலலிதாவின் அதிரடியை கையாண்டிருப்பார். அவர் அதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். அது அவர்களுக்கு அமையவில்லை. இனிமேல் கட்சியை அந்த அளவிற்கு அதிரடியாக வழி நடத்துவார்கள் என்று எதிர்பார்ப்போம்.

தற்போது ஆட்சியமைத்திருக்கும் மு.க.ஸ்டாலின் அதுபோன்ற அதிரடி நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறார்கள் அரசியல் ஆர்வலர்கள். எத்தனை சீனியர் அமைச்சர் என்றாலும், கட்சியில் எத்தனை பெரிய சீனியர் என்றாலும் ஸ்டாலின் சொல்லுக்கு கட்டுப்படுகிற அளவில் நிலைமை இருக்கிறது. எனவே யாராவது தவறு செய்வதாக செய்தி வெளியானால் உடனே அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என்றே தெரிகிறது. அதைத்தான் மக்களும் விரும்புகிறார்கள்.

தமிழக அரசியலை பொறுத்தவரை அதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளைத்தான் மக்கள் ரசிப்பார்கள். அரசு ஊழியர் மற்றும் அதிகாரிகளுக்கு தற்போதைய திமுக அரசு ஆதரவாக இருக்கும் என்று நினைத்துவிடக் கூடாது. தவறு செய்யும் அரசு ஊழியர், அதிகாரிகள் தூக்கியடிக்கபட வேண்டும். தற்போதைய நிலையில் மாற்று அணியில் இருப்போர் அத்தகைய நடவடிக்கையில் இறங்க வாய்ப்பில்லை. ஸ்டாலின் அதிரடியாக நடந்து கொள்ளும் பட்சத்தில் அது அபூர்வமாக பேசப்படும் விசேச செய்தியாகும்.

அதுமட்டுமில்லாமல் புகழ்பெற்ற ஐஏஸ் அதிகாரிகளை நியமித்திருக்கிறார் ஸ்டாலின். அவர்களின் ஆலோசனையை கேட்டு தீவிரமாக செயல்படுவதையும், அவர்களை அவரது கட்சியினர் சீண்டாமல் பார்த்துக் கொள்வதையும் மட்டும் ஸ்டாலின் கண்காணிக்க வேண்டும். அப்படி செயல்படும்போது ஆட்சிக்கு நல்ல பெயர் வரும்.

அதிகாரம் மிக்க ஆட்சியாளர் அவரது சகாக்களாலே பலமிழப்பார்கள். இதை ஆரம்பத்திலேயே புரிந்து கொண்டு, சிறு தவறு செய்வோரை கூட தூக்கியடிக்க வேண்டும். அப்படிபட்ட அதிரடி நடவடிக்கை அனைவரையும் ஒழுங்குபடுத்தும். அப்படிபட்ட ஆட்சியையே மக்கள் அனைவரும் விரும்புவார்கள்.

சாதி,மதம்,இனம் ரீதியான விவகாரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மாநிலத்துக்கு தேவையானதை ஆதரிக்கவும், தேவையில்லாததை ஒதுக்கிவிடவும் வேண்டும். அதற்கு அந்த ஐஏஎஸ் அதிகாரிகளை பயன்படுத்த வேண்டும். அரசியலுக்காக எதிர்ப்பதும், அரசிலுக்காக ஆதரிப்பதுமான நட்பு வட்டத்தை சிறிது காலத்திற்கு ஒதுக்கிவிட வேண்டும்.

தெளிந்த நீரோடை போன்ற நிர்வாகத்தையே மக்கள் எப்போதுமே ஆதரிக்கிறார்கள். அதற்கு ஆட்சியிலும், கட்சியிலும் அதிரடி நடவடிக்கை வேண்டும். ஏற்கனவே இந்த முடிவில் ஸ்டாலின் இருப்பார் என நம்புவோம்!

ஏ.ஆர்.எஸ்.சரவணப்பெருமாள் – நடுநிலை.காம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here